கடுமையான உடற்பயிற்சி செய்யாதீங்க - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கடுமையான உடற்பயிற்சி செய்யாதீங்க -  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Published on

அரசியல் பிரமுகர் ஜெயக் குமார் என்றாலே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், சபாநாயகர், அதிரடி பேட்டிகள், பேட்டிகள் இடையே குத்துச் சண்டை, பாடல்.. என்பதை எல்லாம் தாண்டி, அவரது கட்டுமஸ்தான உடல்வாகு, சுறுசுறுப்பு நினைவுக்கு வரும்.

கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம், ‘கடுமையான உடற் பயிற்சியா?‘ என்ற நமது கேள்விக்கு சிரித்தபடியே பதில் சொல்லாரம்பித்தார்:

‘பலரும் உடற்பயிற்சி என்றால், ஜிம்முக்கு போய் கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நாம் என்ன ஆணழகன் போட்டியிலா கலந்துகொள்ளப் போகிறோம்.. சிக்ஸ் பேக் வைக்க?

உடற்பயிற்சி என்பது நமது உடலைப் பாதுகாக்க.. ஆரோக்கியமாய் வாழத்தான். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தொப்பை இருக்கக்கூடாது அவ்வளவுதான். ஏனென்றால் தொப்பை, உடல் ஆரோக்கியத்தின் எதிரி.

காலையில் நடைப்பயிற்சி போதும். அதிலும் சிலர், ‘என் வீட்டுக்குப் பக்கத் தில் பூங்காக்களோ மைதானங்களோ இல்லை... ஆகவே நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை‘ என்பார்கள். நடைப் பயிற்சி செய்ய, பூங்காவோ, மைதானமோ தேவையில்லை.. கால்களும், மனதும்தான்!

உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் சாலையில், காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்தாலே போதும். நான் இருக்கும் பட்டினப்பாக்கம், கடற்கரைப் பகுதி. ஆகவே அங்கு தினமும் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்கிறேன்.

வெளியூர் சென்றால், அங்கு சாலையோரத்தில்தான் நடைப்பயிற்சி செய்கிறேன். வேலை காரண-மாக, காலை நேரத்தில் முடியாவிட்டால் மாலையில் அரை மணி நேரமாவது நடைப்-பயிற்சி தவறாமல் செய்வேன். அதன் பிறகு வீட்டுக்கு வந்து, சாதாரண உடற்பயிற்சி. நேராக நின்று குனிந்து நிமிர்வது, இரு கைகளையும் நீட்டி மடக்குவது போன்ற எளிய பயிற்சிகளைத்தான் செய்வேன்.

இவை தவிர சில நல்ல பழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர், ஒரு மாடி ஏறுவதானாலும், லிப்டை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். நான் ஐந்து மாடிகள் என்றாலும், படிகளில்தான் ஏறி இறங்குவேன்.

தவிர, பலர், பேப்பர் வாங்க, காய்கறி வாங்க என தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்லவே வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது வாகனத்துக்கும் தேவையில்லாத பயன்பாடு.. பெட்ரோல் வீண். அதைவிட முக்கியமாக, நமது உடல் நலத்துக்கு நல்லது அல்ல.

அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

நான் எனது தொகுதிக்குச் சென்றால் நடந்து சென்றுதான் மக்களை சந்திப்பேன், ஆய்வு செய்வேன்.

அதே போல, நேரம் கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுத்துவதில் ஈடுபடுவேன். நேரம் ஒதுக்கி தினமும் எனது பாத்ரூமை நான்தான் கிளீன் செய்வேன்.

இப்படி சிறு சிறு வேலைகளை நமது உடலுக்கு அளித்தாலே, சுறுசுறுப்பாக ஆரோக்யமாக இருக்க முடியும்

கே: உணவு விசயத்தில் நீங்கள் எப்படி?

ப: உணவு விசயத்தில் நான் மிகக் கட்டுப்பாடாக இருப்பேன். முதல் விசயம், நேரத்துக்கு சாப்பிட வேண்டும். இரவு பகலாக அரசியல் பணி இருந்தாலும், நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் சாப்பிடுவேன். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில்லை.. என்ன சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்.

உணவு குறித்த அறிவு நம் அனைவருக்கும் தேவை.

நிறை கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு என்று இரு வகை உண்டு. இவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம்.. அல்லது தவிர்த்துவிடுவது நல்லது.

அதற்காக முற்றிலும் கொழுப்புச்சத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதே போல எண்ணெயைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான் தினமும், தினை இட்லி, கேழ்வரகு புட்டு போன்றவற்றையே சாப்பிடுகிறேன். மதியமும் அரிசி உணவை அளவோடு.. அதுவும்

சிகப்பரிசியையே பயன்படுத்துகிறேன்.

காய்கறிகளை, பழங்களை சாப்பிடும் பழக்கம் பெரும்பாலோனோருக்கு இல்லை. இவற்றை தாராளமாக பயன்படுத்த வேண்டும். மூன்று வேளையும், உணவுடன் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவேன்.

மற்ற பல உணவு பதார்த்தங்களின் விலையை விட காய்கறி, பழங்கள் விலை குறைவுதான். அதிலும் கொய்யா, வாழைப்பழம் , கேரட், பப்பாளி, கமலா பழம்.. போன்றவற்றை எளிதாக வாங்கலாம்.

தவிர அவ்வப்போது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவது உடலுக்கு மிக ஆரோக்யம் தரும். இதை நான் சிறு வயதில் இருந்து கடைபிடிக்கிறேன்.

இளையவர்கள்கூட, உப்பு, காரம், இனிப்பு மூன்றையும் அளவோடு பயன்படுத்த வேண்டும். சுவை இருக்காதே என நினைக்க வேண்டியதில்லை. பழகிவிட்டால் அது தனிச் சுவையைத் தரும்.

அசைவத்தைப் பொருத்தவரை நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் சிறப்பானவை. குறிப்பாக சூரை (கூதணச்), சல்மன் (குச்டூட்ணிண) ஆகிய மீன் வகைகளை வாரம் இரண்டு முறை உணவில்

சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது பாரம்பரியமே, உணவே மருந்து.. மருந்தே உணவு என்பதுதான். உதாரணமாக துவரம்பருப்பை பயன்படுத்தி திக்கான சாம்பார்,.. கொத்தமல்லி சட்னி, இதர கீரை வகைகள், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு அரைத்து சட்னி.. இது எல்லாமே நமக்கு ஆரோக்கியம்தான். மிளகு, மஞ்சள் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கூடுதலாக சமையலில் பயன்படுத்த வேண்டும். சாதாரணமாகவே கிராம்பு வாயில் போட்டு மெல்லுவேன்.. வாய் மணக்கும் என்பதோடு, உடல் வலுக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று.. எந்த நேரமாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தே சாப்பிடுவேன்.

கே: பலருக்கும் நொறுக்குத் தீனி என்பது பழக்கமாகவே ஆகிவிட்டதே!

ப: அது தவறல்ல. கிராமங்களில் பண்டிகைகளின் போது, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை கயிற்றில் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள். குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் நேரத்தில் அவ்வப்போது ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிடும். அதே போல எள் உருண்டை, கடலை மிட்டாய் போன்றவையும் இருக்கும். இது தவறில்லை. சொல்லப்-போனால் நிலக்கடலை போன்ற சத்தான தானியம் வேறு இல்லை. பாதாம் பிஸ்தாவைவிட சத்தானது நிலக்கடலை.

எனது காரில் காராசேவ், மிக்சர் இருக்காது. கடலை இருக்கும். மேலும் சிகப்பரிசி அவல், பேரீச்சை இருக்கும்.

கொஞ்சம் பசி எடுத்தால், கைப்பிடி அளவு கடலையை எடுத்து

சாப்பிட்டு தண்ணீர் குடிப்பேன். அதே போல, அவல் & பேரீச்சை

சேர்த்து சாப்பிடுவேன். சுவைக்கு சுவை.. ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். எல்லாவற்றையும் விட முக்கியம், படுக்க போகும்போது பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கவே கூடாது. அமைதியாக உறங்க வேண்டும். இதையெல்லாம் கடைப்பிடித்தாலே ஆரோக்யமாக நிம்மதியாக வாழலாம்' விறு விறு என பல டிப்ஸ்களை சொல்லி முடித்தார் ஜெயக்குமார்.

‘சிறு வயதில் நான் கடுமையான உடற்பயிற்சி செய்தது உண்டு. குத்துச் சண்டை விளையாட்டிலும் ஆர்வம் காட்டினேன். அதெல்லாம் குறிப்பிட்ட காலம்தான். பிறகு, நடைப்பயிற்சி மற்றும் எளிதான உடற்பயிற்சிகள்தான்'

எனது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னுமொரு முக்கியமான காரணம், சத்துமாவு கஞ்சி. என் பாட்டி காலத்தில் இருந்து குடும்பத்தினர் இதை அருந்தி வருகிறோம். அந்த டிப்ஸை உங்களுக்குத் தருகிறேன்.

தேவையான பொருட்கள்

கம்பு 100 கிராம்

ராகி 100 கிராம்

கோதுமை 100 கிராம்

பச்சரிசி 100 கிராம்

உளுந்து 100 கிராம்

பாசிப்பயறு 100 கிராம்

கொள்ளு 100 கிராம்

வேர்க்கடலை 100 கிராம்

முந்திரி 100 கிராம்

பாதாம் 100 கிராம்

ஏலக்காய் 100 கிராம்

ஜவ்வரிசி 100 கிராம்

மக்காச் சோளம் 100 கிராம்

கொண்டைக்கடலை 100 கிராம்

பொட்டுக்கடலை 100 கிராம்

மாவு தயாரிக்கும் முறை:

இந்த பொருட்களை தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்துவது எப்படி:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி

சத்துமாவை தேவைப்படும் அளவு

சேர்த்து, கட்டிப்படாமல் நன்கு கரைக்க வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, அதில் பாலை கலந்து நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம்.

பிப்ரவரி, 2023.

logo
Andhimazhai
www.andhimazhai.com